தொழில்நுட்பதின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. எந்த அளவிற்கு தொழில்நுட்பத்தால் நன்மை உள்ளதோ அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தில் தீமைகளும் உள்ளது.
2023 ஆம் வருடத்தை பொறுத்த வரையில் அதிகமாக பேசப்பட்ட தொழில்நுட்பம் என்றால் அது செயற்கை நுண்ணறிவு ( AI ) தான். இவ்வாறு இந்த ஆண்டு தொழில்நுட்பத்தால் நிகழ்ந்த சில சம்பவங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1. பாட் ( Bot ) :
கடந்த 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி அறிமுகமானபோது பயனர்கள் அதன் ஊடாக உரையாடல் வடிவில் டெக்ஸ்ட்களை மட்டுமே ஜெனரேட் செய்யும் பாட் என்ற வகையில் அது இருந்தது. இப்போது டெக்ஸ்ட், இமேஜ் மற்றும் ஆடியோவை இதில் பயனர்கள் பெற முடிகிறது.
இலவச பயன்பாடு என்பது கடந்து ப்ரீமியம் வெர்ஷனும் பயன்பாட்டில் உள்ளது. அதேநேரத்தில் கூகுள் நிறுவனத்தின் ‘பார்ட்’ சாட்பாட் ஜிபிடி-க்கு போட்டியாக வந்து நிற்கிறது. இதை கூகுளில் பயனர்கள் பெற முடிவது மிகவும் எளிது. முக்கியமாக பல்வேறு கூகுள் சேவைகளை கையாளும் திறன் கொண்டுள்ளது. இது தவிர பல்வேறு ஜெனரேட்டிவ் ஏஐ பாட்கள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
2. ChatGPT vs Bard :
சாட்ஜிபிடி(ChatGPT) என்பது மனிதர்களை போன்று பதில்களை உருவாக்கப் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான மொழி உருவாக்க மாதிரியாகும். கேள்வி பதில், மொழிபெயர்ப்பு மற்றும் உரை சுருக்கம் போன்ற பல்வேறு இயற்கை மொழி செயலாக்கப் பணிகளை எளிமையாக்கும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சாட்ஜிபிடி செயலிக்கு நேரடி போட்டியாக, கூகுள் நிறுவனம் ”பார்ட்” தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. மனிதனின் ஆழமான அறிவாற்றல் உடன், கூகுள் பன்மொழிகளில் தன்னகத்தே கொண்டுள்ள வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் கண்டுபிடிப்பு அகியவற்றை ஒன்றிணைக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்தது.
3. டீப்ஃபேக் :
அமெரிக்கா, இந்தியா என உலக நாடுகளில் அதிக கவனம் பெற்றது டீப்ஃபேக் விவகாரம். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்டோரின் டீப்ஃபேக் கன்டென்ட்கள் கவனம் பெற்றன. தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அந்த வீடியோ சித்தரிக்கப்பட்ட விதம்.
போலி வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நான் கர்பா நடனமாடுவது போன்ற போலி வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.
4. ட்விட்டர் பெயர் மாற்றம் :
ட்விட்டரின் பிரபலமான லோகோவான நீலக் குருவி மாற்றப்பட்டு X என ரீபிராண்டிங் செய்து பெயரும் எக்ஸ் என மாற்றப்பட்டது. இந்த திடீர் மாற்றம் உலகையே யூகிக்க வைத்திருந்த நிலையில் ட்விட்டர் X பெயர் மாற்றம் குறித்து அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் அளித்தார்.
X என்பது தனது லட்சியமான அனைத்தையும் உள்ளடக்கிய தளமான ‘எல்லாமே செயலி’என்பதை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் இனி மேல் ட்விட்டர் செயலியில் கிட்டத்தட்ட அனைத்தையும் பதிவிடும் வகையில் மாற்றப்படும் என்றும் கூறியிருந்தார்.
5. ஆப்பிள் விஷன் ப்ரோ :
ஆப்பிள் அதன் முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை ‘விஷன் ப்ரோ’ என்று அறிமுகம் செய்தது. ஹெட்செட் முதன்மையாக ஒரு ஆக்மென்ட் ரியாலிட்டி சாதனமாக நிலைநிறுத்தப்பட்டது. இதன் டயலைப் பயன்படுத்தி எளிதாக AR மற்றும் VR முறைகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
ஆப்பிள் கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி போன்றவற்றிலும் ப்ளூடூத் மூலம் இந்த ஹெட்செட்டை இணைத்து பயன்படுத்தும் வகையில் இது உள்ளது.