கிரிக்கெட் உலகில் முக்கியமானதாக பார்க்கப்படும் ஐந்து சாதனைகளை ஒரே ஆண்டில் செய்து 2023ஆம் ஆண்டின் கிரிக்கெட் நட்சத்திரமாக மாறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்.
சர்வதேச கிரிக்கெட் தொடர்களான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக்கோப்பை ஆகிய தொடர்களின் கோப்பையை வெல்வது என்பது ஒவ்வொரு கேப்டனின் பெரிய கனவு. அந்த இரண்டையும் ஒரே ஆண்டில் வென்று மிகப் பெரும் பெருமைகளை பெற்று இருக்கிறார் பாட் கம்மின்ஸ்.
2021 – 2023 காலகட்டத்திற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. அந்தப் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடியது. பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
அடுத்து 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. உலகக்கோப்பையில் பாட் கம்மின்ஸ் கேப்டனாக அணியை பதற்றம் இல்லாமல் வழிநடத்தி பாராட்டுக்களை குவித்தார்.
இதனைத் தொடர்ந்து கிரிக்கெட்டின் உலகின் முக்கிய டெஸ்ட் தொடராக பார்க்கப்படும் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் சமன் செய்து கோப்பையை தக்க வைத்தது ஆஸ்திரேலிய அணி. கேப்டனாக பாட் கம்மின்ஸ் அந்த தொடரில் அணியை திறம்பட வழிநடத்தி இருந்தார்.
அடுத்து கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு வீரரும் ஏங்கும் விஷயம் என்றால் அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பெரிய தொகைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது. அந்த வகையில் பாட் கம்மின்ஸ் 20.25 கோடிக்கு ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதுவே ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச தொகையாகும்.
அடுத்து ஆஸ்திரேலிய அணி ஆண்டின் இறுதியில் ஆடும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டெஸ்ட் என வர்ணிக்கப்படுகிறது. புத்தாண்டை ஒட்டி நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது என்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய கவுரவமாக உள்ளது.
2023 ஆண்டின் இறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டெஸ்ட்டில் பாட் கம்மின்ஸ் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்ததோடு ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இப்படி கிரிக்கெட்டில் முக்கியமாக பார்க்கப்படும் ஐந்து விஷயங்களை ஒரே ஆண்டில் சாதித்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார் பாட் கம்மின்ஸ்.