மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் 2024ஆம் ஆண்டு காலண்டரை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுராக் தாக்கூர் 2024ஆம் ஆண்டு காலண்டரை வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் அனுராக் தாகூர், பல்வேறு துறைகளில் மத்திய அரசு புரிந்த சாதனைகளை இந்த காலண்டர் விரிவாக எடுத்துக்காட்டுவதாக தெரிவித்தார். உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம், பெண்கள் அதிகாரமளித்தல், பொருளாதாரம், விளையாட்டு, கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிற துறைகளில் அரசின் வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார்.
மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா மாறியுள்ளது என்றும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாகவும் என்றும் அவர் கூறினார். 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை பாஜக ஆட்சியில் 150 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 7ல் இருந்து 23 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மெட்ரோ ரயில் சேவை 22 நகரங்களை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை எடுத்துக்காட்டி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவதாகவும் அனுராக் தாகூர் தெரிவித்தார்.