2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
சென்னை திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1 -ம் தேதி அன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், 2024-ம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு அம்மனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்பட்டு, முதலில் கோ பூஜை நடைபெறும். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசத்தில் தேவி கருமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இதேபோல, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலின் உபகோவிலான அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலிலும் 2024-ம் ஆண்டு 1 -ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடைபெறும்.
இந்த திருக்கோவிலில், புத்தாண்டு அன்று நள்ளிரவு 12 மணிக்கு நடை திறப்பது கடந்த 40 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.