ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க தலைவன் மௌலானா மசூத் அசார், வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் பஹவல்பூர் மசூதியிலிருந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் மௌலானா மசூத் அசார் காரில் திரும்பிக்கொண்டிருந்ததாகவும், அப்போது அவனின் காரில் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட அனைவரும் உடல் சிதறி பலியானதாகவும், இதனையடுத்து அங்கு சென்ற பாகிஸ்தான் போலீசார், அப்பகுதியை சீல் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் போலி ஆவணங்களை காட்டி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்குள் நுழைந்ததாக மௌலானா மசூத் அசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
1999-ம் ஆண்டு நேபாளில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர் லைன்ஸ் விமானத்தை கந்தகாருக்கு கடத்திச் சென்ற தீவிரவாதிகள், இந்திய சிறையில் உள்ள மசூத் அசார் உட்பட 3 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இதனையடுத்து மசூத் அசார் உட்பட 3 தீவிரவாதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் தஞ்சம் புகுந்த மசூத் அசார் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை உருவாக்கினான். பின்னர் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினான். இதனைத்தொடர்ந்து மௌலானா மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டான்.