சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. தன் சொந்த மண்ணில் விளையாடும் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்தார்.
இதனால் அவருக்கு கடைசி டெஸ்ட் போட்டியில் விடைகொடுக்க ஆஸ்திரேலியா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டான இன்று சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சிட்னி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் வார்னர், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். உலகக்கோப்பை தொடரின் போதே தொடர்ந்து இதுகுறித்து பேசி வருகிறேன்.
அதன்படி இந்தியாவில் கோப்பையை வென்றதே மிகப்பெரிய சாதனை தான். அதன்பின் இன்றே ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என்று முடிவெடுத்து கூறி கொள்கிறேன். ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவிப்பதன் மூலமாக உலகம் முழுவதும் நடக்கும் டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் விளையாட முடியும்.
இதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எதிர்காலத்திற்கு தேவையான வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும். இன்னும் இரு ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருவதை அறிவேன். ஒருவேளை அடுத்த 2 ஆண்டுகளில் நான் நல்ல கிரிக்கெட்டை ஆடினால், ஆஸ்திரேலிய அணிக்கு தேவையென்றால், நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய டேவிட் வார்னர் 22 சதங்கள், 33 அரைசதங்கள் உட்பட 6,932 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 6வது இடத்தில் உள்ளார்.