செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், அமெரிக்காவின் பதிலடியில் 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலியாகி இருக்கின்றனர்.
இஸ்ரேல் இராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஆக்ரோஷமாக பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இப்போரில், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆகவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது செங்கடலில் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்கள் மீதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், செங்கடலில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற கப்பலை குறிவைத்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இவர்கள் ஏவிய 2 ஏவுகணைகளையும் அமெரிக்க போர்க் கப்பல் வெற்றிகரமாக நடுவானில் வழிமறித்து தாக்கி அழித்தது.
இதையடுத்து, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் சிங்கப்பூர் கப்பலில் ஏறி கடத்துவதற்காக 4 படகுகளில் சென்றனர். இதையறிந்த அமெரிக்க கப்பற்படை ஹெலிகாப்டர், அப்படகுகளை துரத்திச் சென்று தாக்கியது.
இவற்றில் 3 படகுகள் அழிக்கப்பட்டன. ஒரு படகு மட்டும் தப்பிச் சென்று விட்டது. எனினும் 3 படகுகளில் வந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இதை ஹௌதி கிளர்ச்சியாளர்களே அறிவித்திருக்கிறார்கள். மேலும், இதற்கான விளைவை அனுபவிப்பீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க் கப்பலை செங்கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகளையும் வழிமறித்து தாக்கி அழித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.