சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவில் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் இலவச வைஃபை சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மண்டல – மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. 17-ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் மண்டல பூஜை முடிவடைந்ததும் இரவு நடை சாத்தப்பட்டது.
இதனையடுத்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திறக்கப்பட்டது. வருகிற 15-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கட்டணமில்லா வைஃபை சேவை கடந்த 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து வைஃபை சேவையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தொடங்கி வைத்தது.
இந்நிலையில், பம்பை முதல் சன்னிதானம் வரை ஐயப்ப பக்தர்களுக்காக இன்று மேலும் பல இடங்களில் வைஃபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் 30 நிமிடங்களுக்கு இலவச அதிவேக வைஃபை இணைப்பும், அதன் பிறகு ஒரு ஜிபி-க்கு 9 ரூபாய் கட்டணத்தில் வைஃபை இணைப்பும் வழங்கப்படுகிறது.