இந்தியாவின் முதன்மையான சோலார் மிஷன் ஆதித்யா எல்-1, இம்மாதம் 6-ம் தேதி லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இலக்கை அடையும் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்திருக்கிறார்.
நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பிய கையோடு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலம் 125 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி 1-ஐ சென்றடைந்து, சூரியனை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆதித்யா எல்-1 விண்கலம் வரும் 6-ம் தேதி லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், “ஆண்டின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, அடுத்த 12 மாதங்களில் குறைந்தபட்சம் 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கிறோம். செயற்கைக்கோள்களுக்கு தேவையான சாதனங்கள் தயாரித்தல், சோதனையை நிறைவு செய்தல் போன்றவை சரியாக நடைபெறும் பட்சத்தில் அதிகளவிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு ககன்யான் திட்டத்திற்குத் தேவையானவற்றை தயார் செய்யும் ஆண்டாக அமைய உள்ளது. பல்வேறு கட்ட சோதனைகள் செய்யப்படவுள்ளன. மேலும், ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளும் செலுத்தப்படவுள்ளன. ஆதித்யா எல்-1 விண்கலம் வரும் 6-ம் தேதி எல்-1 புள்ளியை அடையும். அதன் பிறகு இறுதிக்கட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.