நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உலகப் புகழ் பெற்ற கோவிலாகும். மேலும், இந்த கோவில் நகரின் மையத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது.
மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயாருக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாகும்.
கடந்த 1996 -ம் ஆண்டு கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000-ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த திருக்கோவிலுக்கு, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
இதனிடையே, 7 டன் எடையுள்ள ரோஜா, தாமரைப்பூ, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண மலர்களைக் கொண்டு ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.