இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போதெல்லாம் வெற்றிக்கு அருகில் கூட வரமாட்டோம், ஆனால் இப்போது வெற்றியை நெருங்கியுள்ளோம் என்று இந்திய மகளிர் அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டி வெறும் கண்துடைப்பிற்காகவே நடைபெறவுள்ளது.
மேலும் இந்த போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்று புத்தாண்டை வெற்றியுடன் தொடங்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டி குறித்து இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, ” வெற்றி, தோல்வி என்பது விளையாட்டில் ஒரு அங்கம். ஆனால் பேட்டிங்கோ அல்லது பந்து வீச்சோ ஒரு அணியாக முன்னேற்றம் கண்டுள்ளோம். அவர்களின் வெற்றிப் பயணத்தை முடிந்தவரை சீக்கிரம் முறியடிக்க முயற்சிப்போம், நமது அணியில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது ” என்று கூறினார்.
மேலும் அவர், ” இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போதெல்லாம் வெற்றிக்கு அருகில் கூட வரமாட்டோம். ஆனால் இப்போது வெற்றியை நெருங்குவது நல்ல அறிகுறியாகும் ” என்று கூறினார்.