லட்சத்தீவு அகத்தி விமான நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
லட்சத்தீவில் உள்ள அகத்தி விமான நிலையத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
லட்சத்தீவுகள் வழங்கும் மகத்தான சாத்தியக்கூறுகளைக் குறிப்பிட்டதோடு, சுதந்திரத்திற்குப் பிறகு லட்சத்தீவுகள் எதிர்கொண்ட நீண்டகால புறக்கணிப்பையும் சுட்டிக்காட்டினார்.
கப்பல் போக்குவரத்து இப்பகுதியின் உயிர்நாடியாக இருந்தபோதிலும் பலவீனமான துறைமுக உள்கட்டமைப்பை அவர் குறிப்பிட்டார். இது கல்வி, சுகாதாரம், பெட்ரோல், டீசலுக்கும் பொருந்தும் என்று கூறினார்.
தற்போது அரசு அதன் அபிவிருத்திப் பணியை சரியான அக்கறையுடன் மேற்கொண்டுள்ளது என்று கூறினார். “இந்த சவால்கள் அனைத்தும் எங்கள் அரசால் எதிர்கொள்ளப்படுகின்றன”, என்று கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் அகத்தியில் பல வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்த பிரதமர் திரு மோடி, குறிப்பாக மீனவர்களுக்கு நவீன வசதிகளை உருவாக்குவதாகக் தெரிவித்தார். இப்போது அகத்தியில் ஒரு விமான நிலையமும், ஒரு குளிர்பதன ஆலையும் உள்ளன என்று குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, கடல் உணவு ஏற்றுமதி, கடல் உணவு பதப்படுத்துதல் தொடர்பான துறைக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்று கூறினார். லட்சத்தீவில் இருந்து சூரை மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதையும், இது லட்சத்தீவு மீனவர்களின் வருவாயை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இன்றைய வளர்ச்சித் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், லட்சதீவின் மின்சாரம், பிற எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சூரியசக்தி ஆலை, விமான எரிபொருள் கிடங்கு ஆகியவற்றைத் திறந்து வைத்ததையும் குறிப்பிட்டார்.
அகத்தி தீவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவது குறித்து தெரிவித்தவர், ஏழைகளுக்கு வீடுகள், கழிவறைகள், மின்சாரம், சமையல் எரிவாயு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகளை மீண்டும் சுட்டிக்காட்டினார்.
“அகத்தி உட்பட லட்சத்தீவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.