ஒரே நேரத்தில் வானத்திலோ, நிலத்திலோ, கடலிலோ உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய அடுத்த தலைமுறை போர் ஆயுதத்தின் வடிவமைப்பை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா, சீனா என்னும் இருபெரும் பொருளாதார வல்லரசு நாடுகள் இடையே, தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம், தென் சீன கடல் பகுதியில் சீன இராணுவ ஆதிக்கம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மனித உரிமைகள் மீறல், உக்ரைன் போரில் சீனாவின் ரஷ்ய ஆதரவு நிலை என பல்வேறு பிரச்சினைகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இன்னொரு புறம் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீன விஞ்ஞானிகள் குழு, ஒரு புதிய வகை மின்னணு போர் ஆயுதத்தின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, இந்த ஆயுதம் ஒரு ஆண்டெனாவிலிருந்து பல குவிப்புக் கற்றைகளை செலுத்தும் திறன் கொண்டது. அதே நேரத்தில் வானத்திலோ, கடலிலோ அல்லது நிலத்திலோ உள்ள பல்வேறு பொருட்களைக் குறிவைத்து தாக்கி அழிக்கக் கூடிய திறன் கொண்டது.
எதிரிகளின் ரேடார் அல்லது தகவல் தொடர்பு சாதனங்களால் இந்த ஆயுதத்தைக் கண்டுபிடிக்க முடியாது.
சீனாவின் நான்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜியாங் வெய்சியாங் தலைமையிலான ஆய்வுக் குழு, ஆயுதம் தயாரிக்கும் முறைகள், முக்கிய வழிமுறைகள் உள்ளிட்டவற்றை கட்டுரையில் வெளியிட்டது. இது சீனாவின் மின்னணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக இதழில் வெளியிடப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையில், விஞ்ஞானிகள் இந்த நவீன போர் ஆயுதம் எதிர்கால போரில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.