75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
வருகிற ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. 75வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் ராணுவ வீரர்கள், கடுமையான குளிரிலும் தங்கள் சீருடையில் மேள தாளத்துடன் அணிவகுத்துச் சென்றனர்.
கடுமையான குளிர் இருந்தபோதிலும், பதற்றமடையாமல், வீரர்கள் ஆயுதப் படைகளின் அசைக்கப்படாத தன்மையைக் காட்டினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு மற்றும் மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பில் முழு உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகிறார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நெருங்கி வருவதால், பாதுகாப்பு அமைப்புகள் அதற்கான ஆயத்தத்தைத் தொடங்கியுள்ளன.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது, இந்தியா கேட் பகுதியில் உள்ள ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான அணிவகுப்பு ஒத்திகை கர்தவ்யா பாதையில் இன்று தொடங்கியது. இதில், முப்படை வீரர்கள், துணை ராணுவப் படையினர், தேசிய மாணவர் படையினர் ஆகியோர் கலந்து கொண்டு அணிவகுப்பு கடும் குளிரை பொருட்படுத்தாமல் ஒத்திகை நடத்தினர்.