ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சி.ஆர்.பி.எஃப். மற்றும் இராணுவம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் காவல்துறை டி.எஸ்.பி., 2 இராணுவ மேஜர்கள், இராணுவ வீரர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மற்றும் வளர்ச்சிப் பணிகளின் வேகம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, தலைமைச் செயலாளர் அடல் டுல்லோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை இயக்குநர் தாபன் தேகா, டி.ஜி.பி. ஆர்.ஆர்.ஸ்வைன் மற்றும் துணை இராணுவப் படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு ஏஜென்சிகள் கலந்து கொண்டன.
இக்கூட்டத்தில், காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சி.ஆர்.பி.எஃப். மற்றும் துணை இராணுவத்தினர் இணைந்து செயல்பட வேண்டும். மாநில உளவுத்துறையை வலுப்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக அமலில் உள்ள மத்திய அரசின் ‘ஜீரோ டெரர்’ திட்டம் குறித்தும், சமீபத்தில் பூஞ்ச் மற்றும் ரஜோரியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
தவிர, கூட்டத்தில் ரஜோரி மாவட்டத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குகைகளில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை பாதுகாப்பு முகமைகள் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
அதோடு, மத்திய அரசின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. டைரக்டர் ஜெனரல் மாநிலத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஏஜென்ஸி எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையையும் சமர்பித்தார்.
ஜம்மு காஷ்மீரில் 2026-க்குள் ‘ஜீரோ டெரர்’ திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.