கடந்த 2022-ஆம் ஆண்டை விட 2023-ஆம் ஆண்டில் மட்டும் 3 கோடி பேர் சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதிலிருந்து பொது மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது.
சென்னை மெட்ரோ இரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 இலட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ஆம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 11 இலட்சம் பேர் மெட்ரோ இரயிலில் பயணித்துள்ளார்கள்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் 6 கோடியே 9 இலட்சத்து 87 ஆயிரத்து 765 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ஆம் ஆண்டை விட 2023-ஆம் ஆண்டில் 3 கோடியே 1 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2015-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 25 கோடியே 1 இலட்சத்து 17 ஆயிரத்து 72 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.