உத்தரமேரூர் அருகே உள்ள காக்கநல்லூர் கிராமத்தில், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள காக்கநல்லூர் கிராமத்தில், 35 ஆண்டுகளுக்கு மேலாக, இயங்கி வந்த ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்த காரணத்தினால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இடித்து அகற்றப்பட்டது.
தற்காலிக நடவடிக்கையாக, அதேபகுதியில் உள்ள பழுதடைந்த “அசேபா கட்டடத்தில்” ரேஷன் கடை மாற்றம் செய்யப்பட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அசேபா கட்டடம் சிறிய அளவில் உள்ளதால், இட நெருக்கடியில் இயங்கி வருகிறது. இதனால், ரேஷன் அட்டைதாரர்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு, வெயில், மழை காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், கட்டடத்தின் அருகில், குளம், உள்ளிட்ட நீர்நிலைகள் அமைந்துள்ளதால், கடைக்குள் இயற்கையாகவே, நீரூற்று ஏற்பட்டு, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், வீணாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மாவட்ட ஆட்சியர், கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகம், உத்தரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்களில், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டித்தர கோரி காக்கநல்லூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். பல முறை மனு அளித்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, உடனடியாக காக்கநல்லூர் கிராமத்தில், புதிய ரேஷன் கடை கட்டடத்தினை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.