லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரூரி மற்றும் அவரது மெய்க்காவலர்கள் கொல்லப்பட்டார்கள்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் படையின் அரசியல் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலையடுத்து இஸ்ரேல் காசாவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. லெபானான் ஹமாஸ் படைக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி லெபனானில் ஹெஸ்பொல்லா படையுடனும் மோதல் போக்கை இஸ்ரேல் கையாண்டு வருகிறது.
இந்நிலையில் பெய்ரூட் நகரில் நேற்று இரவு நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஹமாஸின் அரசியல் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh Arouri) என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இவர்தான் ஹமாஸ் படையின் ராணுவ பிரிவை உருவாக்கியவர்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை இந்த தாக்குதலையும், சலே அல்-அரூரி (Saleh Arouri) கொல்லப்பட்டதையும் உறுதி செய்துள்ளது. அவருடன் மேலும் 2 ஹமாஸ் ராணுவ தளபதிகளும், அமைப்பைச் சேர்ந்த மற்ற 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 57 வயதான சலே அல்-அரூரி போர் தொடங்கிய பின், கொலை செய்யப்பட்டவர்களில் ஹமாஸின் மிக மூத்த நபர் என தெரியவந்துள்ளது.
சாலே அரோரி ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் முக்கிய தலைவராகவும், ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தவர். இவர் லெபனானில் இருந்து ஹமாஸ் அமைப்பிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளரும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆலோசகருமான மார்க் ரெகவ், இத்தாக்குதல் இஸ்ரேல் நடத்தியது என்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அத்தாக்குதலை யார் நடத்தி இருந்தாலும் அது லெபனான் அரசின் மீதான தாக்குதல் அல்ல, பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலும் அல்ல. இது ஹமாஸ் தலைமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி அரூரியின் கொலை குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால், இராணுவம் “எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள மிகவும் தயாராக இருப்பதாக” கூறினார். லெபனானில் உள்ள இரண்டாவது பாதுகாப்பு அதிகாரி அரூரி கொல்லப்பட்ட தகவலை உறுதி செய்தார்.