உலக ரேங்கிங் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீர்ரகள் பட்டியலை இந்திய மல்யுத்த இடைக்கால கமிட்டி வெளியிட்டுள்ளது.
குரோஷியாவில் உலக ரேங்கிங் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் வரும் 10 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி அறிவித்துள்ளது. இந்த அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
ஆண்கள் பிரீஸ்டைல்: அமன் (57 கிலோ), யாஷ் (74 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ), விக்கி (97 கிலோ), சுமித் (125 கிலோ).
கிரீகோ ரோமன்: ஞானேந்தர் (60 கிலோ), நீரஜ் (67 கிலோ), விகாஸ் (77 கிலோ), சுனில் குமார் (87 கிலோ), நரிந்தர் ஷீமா (97 கிலோ), நவீன் (130 கிலோ).
பெண்கள் பிரீஸ்டைல்: சோனம் (62 கிலோ), ராதிகா (68 கிலோ).
மேலும் இந்த அணியில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோர் இடம் பெறவில்லை.
இதுகுறித்து பூபிந்தர் சிங் பஜ்வா கூறுகையில், ” கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளிடமும் இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பம் உளளதா? என்று கேட்கப்பட்டது. இதில் 13 பேர் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர். மற்ற 5 பேர் கலந்து கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டனர்.
பஜ்ரங் பூனியா இன்னும் பயிற்சியை தொடங்காததால் இந்திய அணியில் இடம் பிடித்தால் வீணாகப்போய் விடும் என்று ஒதுங்கி விட்டார். அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அன்திம் பன்ஹால் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழாவில் பங்கேற்க இருப்பதால் இந்தப் போட்டியை தவிர்த்து விட்டார்” என்றார்.