லட்சத்தீவு பரப்பளவில் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால், மனதளவில் பெரியது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார்.
யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் அகத்தியில் 1,156 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “லட்சத்தீவு பரப்பளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால், அதன் இதயம் பெரியது. இங்கு நான் பெறும் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களால் நான் வியப்படைகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2020-ம் ஆண்டில் நான் இங்கு வந்தபோது, அடுத்த 1,000 நாட்களுக்குள் வேகமான இன்டர்நெட் வசதி கிடைக்கும் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளித்தேன். அதன்படி, இன்று, கொச்சி – லட்சத்தீவு நீர்மூழ்கிக் கப்பல் ஆப்டிகல் ஃபைபர் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, லட்சத்தீவில் இணையம் 100 மடங்கு அதிக வேகத்தில் கிடைக்கும்.
சுதந்திரத்திற்குப் பிறகு, பல தசாப்தங்களாக மத்தியில் இருந்த அரசாங்கங்களின் ஒரே முன்னுரிமை தங்களது அரசியல் கட்சிகளின் வளர்ச்சியாக மட்டுமே இருந்தது. தொலைதூர மாநிலங்கள், எல்லைப் பகுதிகள் அல்லது கடலின் நடுவில் உள்ள தீவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், கடந்த 10 ஆண்டு காலத்தில், எங்கள் அரசாங்கம் எல்லைப் பகுதிகள் மற்றும் கடலின் விளிம்பில் உள்ள பகுதிகளை முன்னுரிமையாக மாற்றி இருக்கிறது.
இன்று உலக கடல் உணவு சந்தையில் தனது பங்கை அதிகரிப்பதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. இதனால் லட்சத்தீவுகள் பெரிதும் பயனடைகின்றன. அதேபோல, லட்சத்தீவின் டுனா மீன்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தவிர, லட்சத்தீவில் கடற்பாசி சாகுபடி தொடர்பான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
லட்சத்தீவின் நிலையான வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டு, பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பை அடிப்படையாகக் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம். இது லட்சத்தீவின் முதல் பேட்டரி ஆதரவு சோலார் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் குறைந்த மாசுபாடு மற்றும் மாநிலத்தின் கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது அகத்தியில் விமான நிலையம் தவிர, ஒரு ‘ஐஸ்’ ஆலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கடல் உணவு பதப்படுத்துதல் தொடர்பான புதிய சாத்தியங்களை உருவாக்கும். அகத்தியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ‘நல் சே ஜல்’ யோஜனா திட்ட பயன்கள் கிடைத்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், மின்சாரம் மற்றும் எரிவாயுவை வழங்க அரசு முயற்சித்து வருகிறது” என்றார்.
தொடர்ந்து, லட்சத்தீவில் இந்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், “லட்சத்தீவில் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் தொடர்புகொள்வது மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு பெண் குழுவானது ஒரு உணவகத்தைத் தொடங்குவதற்கு தங்களின் சுய உதவிக்குழு எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பற்றிப் பேசினர். இதைக் கேட்டு மற்றவர்கள் தன்னம்பிக்கை அடைந்தனர். அதேபோல, இதய நோய்க்கு சிகிச்சையளிப்பதில் ஆயுஷ்மான் பாரத் எவ்வாறு உதவியது என்பதை ஒரு வயதானவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும், பி.எம். கிசான் காரணமாக ஒரு பெண் விவசாயியின் வாழ்க்கையே மாறி இருக்கிறது. மற்றவர்கள், இலவச ரேஷன், திவ்யாங்களுக்கான சலுகைகள், பி.எம். ஆவாஸ் யோஜனா, கிசான் கிரெடிட் கார்டுகள், உஜ்வாலா யோஜனா உள்ளிட்டவை தொடர்பாகப் பேசினார்கள். வளர்ச்சியின் பலன்கள் மிகவும் தொலைதூர பகுதிகளில் கூட எளிதாக எட்டுவதைப் பார்ப்பது உண்மையிலேயே திருப்தி அளிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.