ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட உள்ள நோயாளியின் ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, சுவாச விகிதம், சுவாச முறை, இதயத் துடிப்பு, ஆக்சிஜன் செறிவு, சிறுநீர் வெளியாதல், நரம்பியல் நிலை ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளுக்கான புதியவழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், “நோயாளிகளுக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சைகளால் அவர்கள் உயிர் வாழ்வதில் சாத்தியமில்லை என்னும்போது அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பது பயனற்ற கவனிப்பாக கருதப்படுகிறது.
அதேபோல், உயிருக்குப் போராடும் நோயாளிகளின் மனைவியோ, மகனோ அல்லது மகளோ சம்மதிக்க மறுத்தால் அந்த நோயாளியை ஐசியூ-வில் மருத்துவமனைகள் அனுமதிக்கக் கூடாது.
அதேபோல் தொற்றுநோய் அல்லது பேரிடர் சூழ்நிலை ஏற்படும்போது அதற்கான வசதிகள் இருந்தால், நோயாளியை ஐசியூ-வில் வைத்திருப்பதற்கு மருத்துவமனைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நோயாளிக்கு உறுப்பு செயலிழப்பு அல்லது உறுப்பு ஆதரவு தேவை அல்லது உடல்நிலை மோசமடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ஐசியூ-வில் அந்த நோயாளியை அனுமதிக்க மருத்துவமனைகள் முடிவு செய்யலாம்.
தொடர்ந்து மாற்றத்தில் இருக்கும் நோயாளியின் உணர்வில்லாத நிலை, ஹீமோடைனமிக் உறுதியற்ற தன்மை, செயற்கை சுவாச ஆதரவு தேவை, தீவிர கண்காணிப்பு, உறுப்பு ஆதரவு தேவைப்படும் நிலை, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், உடல்சீரழிவை எதிர்நோக்கும் நோய்த்தன்மை ஆகியவை இருந்தால் அந்த நோயாளியை ஐசியூ-வில் சேர்ப்பதற்கான அளவுகோல்களாக பட்டியலிடலாம் ” என்று வெளியிட்டுள்ளது.
மேலும் அதில், ” இதய சிகிச்சை தொடர்பான நோய்களால் ஆபரேஷன் செய்யப்பட்ட நோயாளிகள், செயற்கை சுவாசம் தேவைப்படும் நோயாளிகள், சுவாசம் உறுதியற்ற தன்மை கொண்ட நோயாளிகள், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை சிக்கலை அனுபவித்த நோயாளிகள், பெரிய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளையும் ஐசியூ-வில் சேர்க்கலாம்.
நோயாளிகள் இயல்பான அல்லது அடிப்படை நிலைக்குத் திரும்புதல், நோயாளிகள் அல்லது அவரது குடும்பத்தினர் ஐசியூ-வில் இருந்து வெளியேற்றத்துக்கு ஒப்புக்கொள்ளுதல் ஆகியவை ஐசியூ-வில் இருந்து நோயாளிகள்வெளியேற்றுவதற்கான அளவுகோல்களாக கருதப்படும்.
ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட உள்ள நோயாளியின் ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, சுவாச விகிதம், சுவாச முறை, இதயத் துடிப்பு, ஆக்சிஜன் செறிவு, சிறுநீர் வெளியாதல், நரம்பியல் நிலை ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அவர் ஐசியூ-வில் சேர்க்கப்பட வேண்டும்” என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.