சீன நாட்டினருக்குச் சொந்தமான 2 கடன் செயலி நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது.
சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செல்போன் செயலிகள் (ஆப்) மூலம் கடன் வழங்கி வருகின்றன. இதன் பின்னர், கடன் வாங்குபவர்களின் செல்போனை ஹேக் செய்து, அவர்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை சேகரித்து, புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவது, உறவினர்களின் நம்பர்களுக்கு போன் செய்து அசிங்க அசிங்கமாகத் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஷைன்பே டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் (எஸ்.டி.ஐ.பி.எல்.), எம்பர்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (எம்.எஸ்.பி.எல்.) மற்றும் பிற நிறுவனங்களுக்கு எதிராக டெல்லி என்.சி.ஆர்., சண்டிகர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் குஜராத் உள்ளிட்ட 19 இடங்களில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
இச்சோதனையின்போது, 1.30 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, இது தொடர்பாக, பெங்களூரு, காசிப்பேட்டை மற்றும் ஜங்கானில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளின் அடிப்படையில், சீன நாட்டினருக்குச் சொந்தமான 2 கடன் செயலி நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது.