பொங்கல் பரிசுத் தொகையை நிறுத்துவதா? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை. விவசாயத்திற்கு அடிப்படையான சூரியன், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை. தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக, பொங்கல் வைக்கத் தேவையான பச்சரிசி, சர்க்கரை, பொங்கலுக்கு அத்தியாவசியமான கரும்பு ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கமும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது.
நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தது 2,000 ரூபாயாவது வழங்கப்படும் என ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று மட்டுமே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே வழங்கப்பட்டு வந்த பொங்கல் ரொக்கத் தொகையை எவ்வித அறிவிப்பும் இன்றி நிறுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்தை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கவில்லை. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டு வந்த 1,000 ரூபாயும் நிறுத்தப்பட்டிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
எனவே, உடனடியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன், வெல்லம், முந்திரி, திராட்சை, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.