கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தற்போது சீசன் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் பெயரளவில் மட்டுமே நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கோவை சிங்காநல்லூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால், அங்கு அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மேலும், அந்த சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த சிறுவன் டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் திடீரென இறந்துவிட்டான். இதனால் ஆவேசம் அடைந்த சிறுவனின் உறவினர்கள் மருத்துமனை நிர்வாகத்தின் அலட்சியமே சிறுவன் மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டினர்.
இதனிடையே, கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு போராட்டம் நடைபெறும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.