உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு, தமிழகம், கேரளா, ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெருமாள் கோவில்களில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி தினம் அன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், உலகப்புகழ் பெற்ற திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலும், சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் வெங்கடாஜலபதியை மனம் உருக தரிசனம் செய்துள்ளனர்.
அதன்படி, கடந்த மாதம் 23 -ம் தேதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனால், சொர்க்கவாசல் வழியாக தினசரி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2024-ல் ஜனவரி 1 -ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் சாத்தப்பட்டது.
கடந்த டிச.23-ம் தேதி முதல் ஜன. 1 – ஆம் தேதி வரை 10 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 934 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், இந்த 10 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலம் 40.18 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.