திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி. இது முரசொலி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019 -ம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்த தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட்டது.
தேசிய பட்டியலின ஆணையம் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மேலும், முரசொலி நிலம், மாதவன் நாயர் என்பவரிடம் இருந்து அஞ்சுகம் பதிப்பகத்திற்கு வாங்கப்பட்டு உள்ளதாகவும், 1974 -ம் ஆண்டு முதல் அந்த நிலத்தின் உரிமை 83 ஆண்டுகளாக முரசொலி அறக்கட்டளை வசம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேசிய பட்டியலின ஆணையத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜரானார்.
அப்போது அவர், பஞ்சமி நிலம் குறித்த புகார் குறித்து விசாரணை மட்டுமே நடத்த உள்ளதாகவும், சொத்தின் மீதான உரிமை குறித்து ஆணையம் விசாரிக்காது என்றும் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து, முரசொலி நிலம் தொடர்பாக, வருவாய் துறை ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை நாளை (ஜனவரி 4) ஒத்தி வைத்தார்.