செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 11ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 120க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை டிரங்கு பெட்டியில் அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றமும் (அக்டோபர் 19) தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த 6ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி S.அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, நவம்பர் 22ம்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் அமலாக்கத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை வழங்க கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடைய நீதிமன்றக் காவல் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையொட்டி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காணொலி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தபட்டார்.
இதனையடுத்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 13 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையிலிருந்தவாறே காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 11 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். 14 ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.