இராமர் வனவாசத்தின்போது அசைவ உணவு சாப்பிட்டார் என்று தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் கூறியதற்கு, அயோத்தி கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த சூழலில், இராமரைப் பற்றியும், இராமர் கோவில் பற்றியும் சர்ச்சைகள் றெக்கை கட்டி வருகின்றன.
அந்த வகையில், இராமர் அசைவம் சாப்பிட்டார் என்று எதிர்கட்சித் தலைவர் ஒருவர் கூற, பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர அவாத். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், ஷீரடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “இராமர் பலருக்கும் பொதுவானவர்.
பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படுபவர். அவர் நம்மை போலவே உணவுப் பழக்கம் கொண்டவர். ராமர் சைவ உணவுகளை உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். அவரை அடையாளம் காட்டி அனைவரையும் சைவ உணவை உண்ண வைக்க முயற்சிக்கின்றனர்.
இராமர் 14 ஆண்டு காலம் காட்டில்தான் வாழ்ந்தார். இந்த சமயத்தில் அவர் சைவ உணவைத் தேடி அலைய முடியுமா? இது சரியா, தவறா என்பதல்ல. இது பொதுமக்களுக்கான கேள்வியாக தொடுக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
மேலும், “யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரால்தான் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது உண்மை. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி ஓ.பி.சி. என்பதால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. காந்தியின் படுகொலைக்கு ஜாதிவெறிதான் உண்மையான காரணம்” என்றும் கூறினார்.
இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து, ஜிதேந்திரா பேச்சை கண்டித்து மும்பையில் இந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. மேலும், ஜிதேந்திரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவிலின் தலைமைப் பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஜிதேந்திர அவாத்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், “ஜிதேந்திர அவாத் கூறுவது முற்றிலும் தவறானது.
இராமர் அசைவ உணவு சாப்பிடவில்லை; அப்படி சாப்பிட்டதாக எந்த சாஸ்திரங்களிலும் குறிப்பிடப்படவில்லை. இராமர் வனவாசத்தில் பழங்களை மட்டுமே சாப்பிட்டார் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எங்கள் கடவுள் இராமர் எப்போதும் சைவ உணவு சாப்பிடுபவர். இராமரை அவமதிக்கும் வகையில் ஜிதேந்திர பேசுகிறார்” என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே, ஜிதேந்திர அவாத் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி நழுவிக் கொண்டது. இந்த சூழலில், “எனது பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜிதேந்திர அவாத் கூறியிருக்கிறார்.