டெல்லி மொஹல்லா மருத்துவமனைகளில் போலி ஆய்வக சோதனை மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி அரசு மருத்துவமனைகளில் போலி மருந்துகள் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொஹல்லா மருத்துவமனைகளில் இல்லாத நோயாளிகளுக்கு போலி ஆய்வக சோதனைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
லட்சக்கணக்கான போலி சோதனைகளுக்காக தனியார் ஆய்வகங்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நோயாளிகள் பெயரில் போலி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு, மொஹல்லா கிளினிக்குகளுக்கு மருத்துவர்கள் வரவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் இருப்பதாகக் காட்டப்பட்டு பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர் இல்லாத நோயாளிகளிடம் சோதனை நடத்தப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.
முன்னதாக கடந்த மாதம், டெல்லி துணை நிலை ஆளுநர், அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகளின் விநியோகம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார். மேலும் இந்த தரமற்ற மருந்துகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை அவர் கூறியிருந்தார்.