திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன.
இதுதொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற 2ஆம் கட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
எனவே, வரும் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்குவது என முடிவு செய்துள்ளதாகவும், தொமுச தொழிலாளர்கள் உட்பட அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்படக்கூடாது என கருதும் அரசு, தொழிற்சங்கத்தினரை அழைத்து பிரச்சினைகளை பேசி தீர்க்க முன் வரவேண்டும்.
வேலை நிறுத்த போராட்டத்தை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.