அரசு முறைப் பயணமாக லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கடற்கரையில் ஹாயாக ‘வாக்கிங்’ சென்றது, கடலில் ஸ்விம்மிங் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் 2 நாள் அரசு முறைப் பயணமாக திருச்சி, கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு சென்று வந்தார். குறிப்பாக, 2-ம் தேதி திருச்சி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு லட்சத்தீவு சென்றவர், இரவு அங்கேயே தங்கி மறுநாள் காலை 1,156 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அப்போது, லட்சத்தீவு கடற்கரையில் காலையில் பிரதமர் வாக்கிங் சென்றார். அதேபோல, கடலில் நீச்சல் அடித்து மகிழந்தார். இந்த சூழலில், தனது லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “சமீபத்தில் நான் லட்சத்தீவு சென்றிருந்தபோது அம்மக்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அந்த மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதி மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
லட்சத்தீவில் வளர்ச்சியை ஏற்படுத்தி அங்குள்ள மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, சிறந்த சுகாதாரம், அதிவேக இணையம் மற்றும் சுத்தமாகக் குடிநீர் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.
அதேசமயம், உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாத்துக் கொண்டாட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். இதை மனதில் வைத்தே புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்தோரிடம் உரையாடினேன்.
எங்கள் முயற்சிகள் சிறந்த சுகாதாரம், மக்களுக்குத் தன்னம்பிக்கை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயம் எனப் பல துறைகளில் வளர்ச்சிக்கு உதவுவதை நேரடியாகப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது. அங்கே நான் கேட்ட சம்பவங்கள் நெகிழ வைப்பதாக இருந்தது.
இயற்கை அழகுடன், லட்சத்தீவின் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பது குறித்துச் சிந்திக்க இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பை கொடுத்தது.
புதுப்புது சாகசங்களை விரும்புவோர் நிச்சயம் லட்சத்தீவுக்கு செல்ல வேண்டும். நான் அங்கிருந்தபோது ஸ்நோர்கெல்லிங் செய்தேன். அது மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. அழகிய கடற்கரைகளில் அந்த அதிகாலை நடைப்பயணங்கள் பேரின்ப தருணங்களாக இருந்தன.
லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. அது மக்களின் பாரம்பரியம் மற்றும் அன்பிற்குச் சான்றாக இருக்கும் இடம். இது எப்போதும் நினைவில் நிற்கும் செழுமையான பயணமாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.