வடகொரியா தனது மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து தென்கொரியாவை நோக்கி 200 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், வடகொரியா தனது மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து தென்கொரியாவை நோக்கி 200 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
தென்கொரியாவின் யோன்பியோங் தீவுப்பகுதியைக் குறிவைத்து, இன்று காலை 9 மணியளவில், வடகொரியா தனது மேற்கு கடற்கரையில் இருந்து பீரங்கி மூலம் 200-க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியது.
வடகொரியா வீசிய பீரங்கி குண்டுகள், சியோலுக்கு கிழக்கே 115 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள யோன்பியோங் தீவுக்கு அருகே கடல்பகுதியில் விழுந்தன. இதை அடுத்து, தீவுப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்ளுக்கு செல்லுமாறு தென்கொரியா உத்தரவிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே, ஏற்கனவே பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
வடகொரியாவின் பீரங்கி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியா, தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.