36 வருடங்களுக்கு முன்பு ராமாயண நாடகத்தில் சீதையாக நடித்த தீபிகா சிக்லியாவுக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது சீதைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் தொலைக்காட்சியில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.
இந்த சீரியலில் ராமர் கேரக்டரில் அருண் கோவில் என்பவரும் சீதை கேரக்டரில் தீபிகா சிக்லியா என்பவரும் நடித்திருந்தனர். 1987 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 1988 ஆம் ஆண்டு முடிந்தது, அதன் பிறகு சமீபத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது மீண்டும் ஒளிபரப்பானது.
ராமாயண நாடகத்தில் சீதையாக நடித்த தீபிகா சிக்லியாவுக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தீபிகா, ” அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு எனக்கு அழைப்பிதழ் வழங்கினர். இந்த விழாவில் பங்கேற்பது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக இருக்கும். ராமாயண நாடகத்தில் சீதையாக நடித்தது எனது பாக்கியமாக நான் கருதுகிறேன்.
ராமாயணம் போன்ற ஒரு ஆன்மீக நாடகத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்குத் தெய்வீக அருள் வேண்டும். சீதை கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் என்று பார்த்தால், ஒரு சிலர் தான் நடித்திருக்கின்றனர், சீதையாக நடித்த நாங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று கூறினார்.
மேலும் அவர், ” ஜனவரி 22 அன்றைய நாளை நாம் அனைவரும் தீபாவளியைப் போன்று கொண்டாடி நம் வீட்டிற்கு ராமரை அழைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ஜனவரி 22 தான் தீபாவளி என்று கூறினார்.