பாஜக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் பயனடையுமாறு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை சேலம் மேற்கு, சேலம் வடக்கு மற்றும் சேலம் தெற்கு சட்டசபை தொகுதிகளில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சேலம் மாநகரம், பல்லாயிரமாண்டு புகழ் தாங்கி நிற்கும் சுகவனேஸ்வரர் கோவில், நிலத்தை காக்கும் பெருந்தாயான கோட்டை மாரியம்மன் கோவில், ஊத்துமங்கலம் முருகன் கோவில், தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் என வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் நிரம்பியுள்ள பகுதி.
எஃகு நகரமாக அறியப்படும் சேலம் மக்களின் உழைப்பும் உறுதியும் எஃகினைப் போன்றதே என்பதை யாராலும் மறுக்க முடியாது. சேலம் கோனேரிப்பட்டியில் ரோம பேரரசின் வெள்ளி நாணயங்கள் கிடைத்ததை வைத்து பார்க்கும் போதே இந்தப் பகுதி சங்க காலத்திற்கு முன்பிருந்தே பெருந்தொழில் நகரம் என்பது உறுதியாகிறது.
விவசாயம், நெசவு, கனிமவளம், இயந்திர உற்பத்தி என எல்லா துறையிலும் சேலம் உயர்ந்து விளங்குகிறது. தரமான பட்டுநூல் தயாரிப்பு, உலகப் புகழ்பெற்ற மல்கோவா மாம்பழம், இரும்பு உற்பத்தி என தொழில் நகரமாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நமது மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கிய சேலம் ஜவ்வரிசியாலும், புகழ்பெற்றது.
சேலம் மாம்பழம், சேலம் கத்திரிக்காய் மற்றும் சேலம் கொலுசுக்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக பாஜக முன்னெடுத்து செல்லும்.
தென் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டபோது, முதலமைச்சர் ஸ்டாலின் இந்தி கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி சென்றிருந்தார்.
அங்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலினையும், டி.ஆர்.பாலுவையும் பார்த்துக் கூறுகிறார். கடந்த 60 ஆண்டுகளாக, வட மாநில மக்கள் மீது வெறுப்பை விதைத்தார்கள்.
இன்று உத்திரப் பிரதேச மாநிலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக மாறியிருக்கிறது. தமிழகம் மூன்றாவது இடத்துக்குப் போய்விட்டது. 60 ஆண்டு காலமாக ஜாதி அரசியல் செய்து மக்களிடையே பிரிவினையைத் தூண்டுவதைத் தவிர திமுக செய்ததென்ன?
எந்தத் தகுதியும் இல்லாமல் ஒரு குடும்பத்தில் பிறந்ததை மட்டுமே தகுதியாக வைத்து, பதவிக்கு வரும் திமுக அமைச்சர்களால், தமிழகத்தில் 13,000 பள்ளி வகுப்பறைகள் கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியிலும், வெட்டவெளியிலும் செயல்படுகின்றன. அதற்கு நிதி இல்லை.
ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். நியாயமாக, திமுக ஊழல் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யத்தான் பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும்.
காசி தமிழ்ச் சங்கமத்தில் நமது பிரதமர் பேசும்போது, அவரது உரையை தமிழில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்திருந்தார். காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம், திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பது என தமிழ் மொழியின் பெருமையை நமது பிரதமர் உலகறியச் செய்கிறார்.
ஆனால் திமுக, 60 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை. தமிழ் மொழித் தேர்வில் 55,000 மாணவர்கள் தோல்வியடையும் நிலையில்தான் கல்வித் தரம் இருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், உலக அரங்கில் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, தற்போது 5 ஆவது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சியடைந்துள்ளது.
வரும் 2028 ஆண்டில் உலகில் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறும். வளரும் பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம் – விக்ஸித் பாரத் என்று நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள், 2047 ஆம் ஆண்டு, நமது நாடு உலகத்தின் முதன்மைப் பொருளாதார நாடாக மாற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் 5 பேரில் ஒருவர் மதுவுக்கு அடிமை. திமுகவுக்கு வருமானம். மதுவின் கோரமுகம் ஒவ்வொரு வீட்டுக்கும் வர ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் மதுவால் ஏற்படும் மரணங்கள் அல்லாது, குற்றச் சம்பவங்களும் அதிகரித்து விட்டன. பாஜக ஆட்சிக்கு வந்ததும், டாஸ்மாக், முதல் ஆண்டு 33%, இரண்டாம் ஆண்டு 33%. மூன்று ஆண்டுகளில் டாஸ்மாக் மூடப்படும். எரிசாராய விற்பனை இல்லாமல் விவசாயிகள் பயனடையுமாறு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழகம் செலுத்திய வரி 6 லட்சத்தி 23 ஆயிரம் கோடி. மத்திய அரசு தமிழகத்துக்கு திருப்பி வழங்கியது 6 லட்சத்து 93 ஆயிரம் கோடி.
கொடுத்த வரியை விட அதிகமாகவே தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி, நூறு ரூபாயில் 71 ரூபாய், மாநில அரசுக்கே கொடுக்கப்படுகிறது. மீதமுள்ள 29 ரூபாயில் மத்திய அரசு, தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள், ஏர்போர்ட் விரிவாக்க பணிகளுக்கு 4542 கோடி ரூபாய், துறைமுகங்கள் மேம்படுத்த 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்த 43,935 கோடி ரூபாய், கிராமப்புற சாலைகளை மேம்படுத்த 3376 கோடி ரூபாய், தமிழகத்திற்கு 7 ஆண்டுகளில் வழங்கப்பட்ட முத்ரா கடன் 2.02 லட்ச கோடி ரூபாய், சிறு, குறு, நடுத்தர நிறுவங்களுக்கு வழங்கப்பட்ட கடன் 26,659 கோடி ரூபாய், சுவநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.
1538 கோடி ரூபாய், PM கிசான் திட்டத்தில் மட்டும் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட நிதி சுமார் 11,000 கோடி ரூபாய், விவசாயிகள் மேம்பாட்டிற்கான திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி 10,415 கோடி ரூபாய், மீனவர்களின் நலத்திட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட நிதி 2820 கோடி ரூபாய், 100 நாள் வேலை திட்டத்திற்கு 9 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய நிதி 48,506 கோடி ரூபாய், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு 16,335 கோடி ரூபாய், தமிழகத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு வழங்கப்பட்ட நிதி 12,641 கோடி ரூபாய், கல்வி மேம்பாட்டிற்கு வழங்கப்பட்ட நிதி 12,967 கோடி ரூபாய், தமிழகத்தின் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்க வருடத்திற்கு 10,000 கோடி ரூபாய் என கடந்த 9 ஆண்டுகளில் 10.76 லட்ச கோடி ரூபாய் நமது மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினிடம் மக்கள் செலுத்திய வரிப்பணத்திற்குக் கணக்கு கேட்டால், திமுக அமைச்சர்கள் ஊழல் செய்து சொத்து சம்பாதித்த பல லட்சம் கோடி சொத்துக்களைத் தான் கூற முடியும். நிதியமைச்சராக இருந்த பிடிஆர் அவர்களே, முதலமைச்சரின் மகனும் மருமகனும் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்கள் என்று கூறினார். அதற்கு இன்னும் முதலமைச்சர் பதில் கூறவில்லை.
ஏழை, பெண்கள், இளைஞர், விவசாயி என நான்கு ஜாதிகளுக்காக மோடி ஆட்சி செய்கிறார். ஏழை என்ற ஜாதி முன்னேற வேண்டும் என்பதற்காக பிரதமர் ஆட்சி செய்கிறார். வரும் பாராளுமன்றத் தேர்தலில், கட்சி வித்தியாசம் இல்லாமல், நமது பிரதமருக்கு வாக்களிக்க வேண்டும். திமுகவுக்கு எதிராக, ஜாதி அரசியலுக்கு எதிராக, ஊழல் அரசியலுக்கு எதிராக, சாராய அரசியலுக்கு எதிராக, குடும்ப அரசியலுக்கு எதிராக பண அரசியலுக்கு எதிராக, நல்லாட்சி தரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கத் தமிழகமும் துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.