திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தை மாத பிறப்பை வரவேற்கும் உத்திராயண புண்ணிய கால பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.இது திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையையும் கொண்டது.
24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டது. இந்த சிவாலயத்தில் 142 சன்னதிகள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் அமைந்துள்ளன.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தை மாத பிறப்பை வரவேற்கும் உத்திராயண புண்ணிய கால பிரமோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினசரி காலை மாலை விநாயகர் சந்திரசேகர் அம்பாளுடன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி உலா நடைபெறும். பத்தாம் நாளான தை மாதம் முதல் நாள் திங்கட்கிழமை தாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.