மேற்கு வங்கத்தில் சோதனை நடத்த சென்ற போது தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமலாக்கத்துறை அதிகாரிகளை அம்மாநில ஆளுநர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது ரேஷன் கார்டு விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஜோதிப்ரியா மல்லிக்கை கைது செய்தனர். இந்நிலையில், பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த சென்றனர்.
அப்போது வீட்டுக்கு முன் திரண்ட சிலர் அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கியுள்ளனர். மேலும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அமலாக்கத்துறையினரின் வாகனங்கள் அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே காயம் அடைந்த அதிகாரிகள் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்க உள்துறை செயலர் மற்றும் டிஜிபிக்கு ஆளுநர் ஆனந்த போஸ் நேற்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.