மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
வரும் 9 -ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. மொத்தம் 35ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. 6 ஆயிரம் பேருந்துகள் ஓட்டுநர் – நடத்துனர் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 800 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியில் உள்ள ஓட்டுனர் நடத்துனருக்கு கூடுதல் பணி வழங்கி அழுத்தம் கொடுக்கின்றனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்தால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள். தமிழக அரசு 8 -ம் தேதி நடத்தும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
போக்குவரத்து அமைச்சர் மனைவியின் பெயரில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. திமுக அரசு போக்குவரத்து கழகத்தை நிர்மூலமாக்கிவிட்டது.
ஜல்லிக்கட்டு மைதானம் என்பது போட்டிக்கு சம்மந்தமே இல்லாத இடத்தில் கட்டியுள்ளனர். மக்கள் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு செல்ல தயாராக இல்லை.
ஜல்லிக்கட்டு போட்டு தடைக்கு காரணமே திமுக – காங்கிரஸ் கட்சித்தான். விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பத்திரப் பதிவுத்துறையில் அமைச்சர் மூர்த்திக்கு என தனியாகவே கட்டணம் வாங்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் புரோக்கர் மூலமாக செல்கிறது. பத்திரப்பதிவுத்துறை பண வசூல் துறையாக மாற்றியுள்ளது. இதனைக் கண்டித்து பத்திர பதிவுத்துறை அலுவலகத்தின் முன்பு பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.
லஞ்ச ஒழிப்புத்துறை தினசரி பத்திரப்பதிவு அலுவலகத்திலும், புரோக்கர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தினால் கோடிகோடியாக பணம் சிக்கும். இதில், தமிழ்நாட்டின் பாதிக்கடனை அடைத்துவிடலாம் என்றார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், அமலாக்கத்துறையின் ஸ்பெல்லிங் கூட எங்க மாவட்ட செயலாளருகdகு தெரியாது.
விவசாயிகள் மீதான அமலாக்கத்துறை நோட்டீஸ்-ல் சாதி பெயர் குறிப்பிட்டுள்ளது என்பது காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் சாதி பெயர் இடம் பெற்றதால் தான் இடம் பெற்றுள்ளது என கூறுகிறார்கள்.
வனத்துறை சார்பில் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்ததன் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.
அரசியல்வாதிகள் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து பேசும்போது எங்கு தவறு என்று தெளிவாக குறிப்பிடவேண்டும் என்றார்.