பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள் என்று டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதன் காரணமாக, காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
எனவே, பெரும்பாலும் டெல்லியில் நடைபெற்று வந்த இம்மாநாட்டை, நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் நடத்த ஊக்குவித்து வருகிறார். அதோடு, மாநாட்டின் அனைத்து முக்கியமான அமா்வுகளிலும் தவறாமல் பங்கேற்கும் பிரதமர் மோடி, காவல்துறை இயக்குனர்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளை கேட்டறிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்களின் 58-வது மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இம்மாநாட்டின் இறுதி 2 நாட்களான இன்றும், நாளையும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
இம்மாநாடு தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாட்டில் இணையவழி குற்றங்கள், காவல்துறை தொழில்நுட்பம், சிறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.
மாநாட்டின் முக்கிய அம்சமாக புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் எனும் போலி சித்தரிப்புகளால் ஏற்படும் சவால்கள் மற்றும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, பிரதமரிடம் கருத்துகள் மற்றும் யோசனைகள் பகிரப்படும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் ஒவ்வொரு கருப்பொருளின் கீழ் மாநாட்டில் முன்வைக்கப்படும். இதனால், மாநிலங்கள் பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்து கொள்ளவும் முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இம்மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் மற்றும் உள்துறை இணையமைச்சர்கள், மத்திய அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டிருக்கின்றனா்.
இம்மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ், 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒன்று தேசிய கல்விக் கொள்கை; மற்றொன்று ஆங்கிலேயர் கால சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
புதிய குற்றவியல் சட்டங்கள் தண்டனை அளிப்பதைவிட, நீதியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதன் வாயிலாக நாட்டின் குற்றவியல் நீதித்துறை நவீன மற்றும் அறிவியல் மாற்றத்துக்கு உட்படுத்தப்படுவது அவசியம்.
குறிப்பாக, நமது தரவுகளை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதேபோல், போலீஸாருக்கு பயிற்சி அளிக்கும்போதே தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.