நாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குடியரசு தின அணிவகுப்பை நேரடியாக காண டிக்கெட் புக் செய்வது எப்படி என்பதை காண்போம்.
நாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய புகழ்பெற்ற ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும். அணிவகுப்பு காலை 9:30 மணிக்கு விஜய் சவுக்கிலிருந்து தொடங்கி ஐந்து கிலோமீட்டருக்கு மேல் சென்று தேசிய மைதானத்தில் முடிவடையும்.
1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த அணிவகுப்பு நாட்டின் ராணுவ வலிமையை வெளிப்படுத்துவது மட்டுமின்றி அதன் செழுமையான கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும். நேர்த்தியான சீருடை அணிந்த வீரர்கள் ஒன்றாக அணிவகுத்துச் செல்வார்கள். மேலும் கவச வாகனங்கள் மற்றும் போர் விமான அணிவகுப்பும் நடைபெறும்.
இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களின் அலங்கார ஊர்தி, நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற பாடல்கள் இடம்பெறும்.
இந்த அணிவகுப்பை காண நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கூடுவார்கள். பண்டைய காலங்களிலிருந்து நவீன ஜனநாயக நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தையும் பிரகாசமான எதிர்காலத்திற்கான அதன் அர்ப்பணிப்பையும் அனைவருக்கும் நினைவூட்டுவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
இந்த அற்புதமான நிகழ்வில் கலந்துகொள்ளவும், காணவும் ஏராளமானோர் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை காண டிக்கெட் புக் செய்வது எப்படி என பார்ப்போம்?
தேதி: ஜனவரி 26
இடம்: ராஜ்பாத், டெல்லி.
நேரம்: காலை 10:00 மணி (தொடக்க நேரம்: காலை 9:30 மணி)
குடியரசு தின அணிவகுப்பு டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்குவது எப்படி?
1: அழைப்பிதழ் மேலாண்மை அமைப்பு (IMS) அல்லது பாதுகாப்பு அமைச்சகத்தின் Aamantran ஆன்லைன் போர்டல் (aamantran.mod.gov.in/login) செல்லவும்.
2: உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும். அதற்கு அனுப்பப்பட்ட OTP பதிவு செய்யவும்.
3: உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற பிற விவரங்களைப் பூர்த்தி செய்து பதிவு செய்யவும்.
4: நிகழ்வுகளின் பட்டியலிலிருந்து “குடியரசு தின அணிவகுப்பு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஐடி வகையைத் தேர்ந்தெடுத்து சரியான அடையாளச் சான்றினைப் பதிவேற்றவும்.
5: டிக்கெட்டுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தி தொடரவும்.
6: ஆன்லைன் டிக்கெட்டைப் பதிவிறக்கவும்.
குடியரசு தின அணிவகுப்பு டிக்கெட்டுகளை ஆஃப்லைனில் வாங்குவது எப்படி?
இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ITDC) பயண கவுன்டர்கள், டெல்லி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (DTDC) கவுண்டர்கள் மற்றும் டெல்லியின் பல்வேறு இடங்களில் உள்ள துறைசார் விற்பனை கவுண்டர்கள் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளைப் பெறலாம். கூடுதலாக, பாராளுமன்ற மாளிகை வரவேற்பு அலுவலகம் மற்றும் ஜன்பத்தில் உள்ள இந்திய அரசு சுற்றுலா அலுவலகம் ஆகியவை குறிப்பிட்ட நேரங்களில் டிக்கெட் வாங்கலாம்.
சேனா பவன், சாஸ்திரி பவன், ஜந்தர் மந்தர், பிரகதி மைதானம் மற்றும் பார்லிமென்ட் ஹவுஸ் ஆகிய இடங்களில் உள்ள சாவடிகள் மற்றும் கவுண்டர்களில் இருந்து டிக்கெட்டுகளை ஆஃப்லைனில் வாங்கலாம். ஆஃப்லைனில் டிக்கெட் வாங்கும் போது, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு அல்லது பாஸ்போர்ட் அசல் புகைப்பட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.