வைகை அணையின் நீர்மட்டம் இன்று அதிகாலை முழுகொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணை, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன.
அந்த வகையில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அணையின் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் இன்று அதிகாலை முழுகொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
அதன்படி, வைகை அணையில் உள்ள 7 பிரதான மதகுகள் வழியாக, வினாடிக்கு 3 ஆயிரத்து 106 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது
ஏற்கனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை கரையோர பகுதிகளில் வசிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.