தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 1994 -ம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாநகரம், குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில், போராட்டத்தின் 100-வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது, காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதனால், அன்றைய தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட 2018 மே 28 -ம் தேதி ஆணை பிறப்பித்தது. அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து ஆணை பிறப்பித்தது.
இதனிடையே, தில்லியில் நடைபெற்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் ஸ்டெர்லைட் தொடர்ந்து இயங்க 15.12.2018 -ல் அனுமதி அளித்தது.
உச்ச நீதிமன்றத்தில், நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. 2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில், 2020 ஆகஸ்ட் 18 -ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 22 -ம் தேதி வருகிறது.
இந்த வழக்கு விசாரணை, தமிழகத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.