மதுரை- மேலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தற்காலிக சுகாதார தன்னார்வலராக தனலெட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த (ஜனவரி) 4 -ம் தேதி அன்று உடப்பம்பட்டி அங்கன்வாடி மையம் அருகே நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த அழகன் (எ) குமார் என்பவர் தனலெட்சுமியிடம், தகாத முறையில் தகராறு செய்ததோடு, சாதியைக் குறிப்பிட்டு இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், தனலெட்சுமியின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து, கட்டையை எடுத்து தோள்பட்டையிலும், தலையிலும் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், தனலெட்சுமி பலத்த இரத்தகாயம் அடைந்துள்ளார். அவரை காப்பாற்றச் சென்ற அவரது கணவர் செந்தில் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில், படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அழகன் (எ) குமார் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.