மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளரிடம் பணம் பெற்ற வழக்கில், அமலாக்கத்துறையின் 2-வது குற்றப்பத்திரிகையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.
இணையதளத்தில் மகாதேவ் சட்டா செயலி எனும் பெயரில் சூதாட்ட செயலி ஒன்று இருக்கிறது. இந்த செயலி சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியைச் சேர்ந்த சவுரப் சந்த்ரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோருக்குச் சொந்தமானது.
இந்த செயலியில் ஏராளமானோர் பணம் செலுத்தி சூதாடி வந்தனர். இதனால், இச்செயலியின் நிறுவனர்கள் நாள்தோறும் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து வந்தனர்.
இந்த சூழலில், இச்செயலியின் நிறுவனர்களில் ஒருவரான சவுரப் சந்த்ரகர் 250 கோடி ரூபாய் செலவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் சவுரப் வந்தார்.
இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், மகாதேவி சூதாட்டி செயலி நிறுவனம், சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே, கோடிக்கணக்கான பணத்துடன் சென்ற அசீம் தாஸ் என்பவர், கடந்த நவம்பர் மாதம் ராய்ப்பூரில் சிக்கினார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு இச்சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அசீம் தாஸுடம் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், அம்மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு பணத்தைக் கொண்டு செல்வதை ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து அசீம் தாஸ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த சூழலில், அமலாக்கத்துறையின் 2-வது குற்றப்பத்திரிகையில் பூபேஷ் பாகலின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷேஷாத் பூனவாலா கூறுகையில், “சி.எம். என்றால் காங்கிரஸ் கட்சிக்கு சீஃப் மினிஸ்டர் அல்ல; கரப்ஷன் மினிஸ்டர். பிரதமர் மோடி மக்களுக்கு “ரூபே” கார்டு கொடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியோ “பூபே” கார்டு வழங்கி இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தை வெறும் ஏ.டி.எம்.மாக காங்கிரஸ் கருதியது. இரு கைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்திக் கொண்டது. 500 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கச் சென்ற ஒருவர், கையும் களவுமாக பிடிக்கப்பட்ட நிலையில், இதை உறுதிபடுத்தும் ஆதாரங்களும் தற்போது வெளியாகி இருக்கின்றன.ஆகவே, ஊழலை ஆதரிக்கிறதா என்று காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.