இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தால், இந்திய சந்தையில் நுழைய ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்புக்கின்றன என்று கூறிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கார்ப்பரேட் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதில் ஐ.சி.எஸ்.ஐ. முக்கியப் பங்களிப்பை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கார்ப்பரேட் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான 23-வது ஐ.சி.எஸ்.ஐ. தேசிய விருதுகளை இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனம் நேற்று புதுடெல்லியில் வழங்கியது. நிகழ்ச்சியில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்துகொண்டு, விருதுகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது, கார்ப்பரேட் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதில் ஐ.சி.எஸ்.ஐ. முக்கியப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. நிறுவனச் செயலாளர்கள் பொருளாதாரத்தில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம் நிறுவனங்கள் வலுப்படுத்துகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதைப் பார்த்து ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைய விரும்புகின்றன. அதிக வெளிப்படைத்தன்மை வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும்.
உலக அளவில் பொருளாதார சூழ்நிலையில் சாதகமான மாற்றங்களை கொண்டு வர இந்திய நிறுவனச் செயலாளர்கள் முக்கியப் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நல்ல விவாதங்கள் மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட சட்டங்களை உருவாக்குவதை உறுதி செய்ய, மக்கள் பிரதிநிதிகளிடம் விழிப்புணர்வு மற்றும் திறனை வளர்ப்பதில் நிறுவன சட்ட வல்லுநர்கள் உதவ வேண்டும்” என்றார்.