ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் மியான்மர் நாட்டு மீனவர்களின் கடல் தேர் கரை ஒதுங்கியது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் ஓலைக்குடா கலங்கரை விளக்கம் அருகே விசித்திர தேர் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் கடலின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது அது மரம் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட தேர் என்பதும் அதில் சிலை மற்றும் பூஜை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது.மேலும் கொடி ஒன்றும் அதில் நடப்பட்டிருந்தது.
இது மியான்மர் நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த தேரில் மியான்மர் நாட்டின் பர்மீஸ் மொழியில் சில வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. ‘கடல் வளம், மீன்வளம் பெருக வேண்டி மியான்மர் மீனவர்கள் பூஜை செய்து கடலில் விட்டிருக்கலாம் எனவும், காற்றின் வேகத்தில் அது ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்கச்சிமடம் அந்தோணியார் புரம் கடற்கரையில் 20 அடி உயர புத்தர் கோயில் போன்ற வடிவமைப்பில் கடல் தேர் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.