அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்!
அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், இஸ்லாமியர்கள் பலரும் இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக நன்கொடை வழங்குவதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இஸ்லாமிய பெண்கள் இருவர் இராமஜோதியை எடுத்து வந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் ஆகியோர்தான், ‛கடவுள் இராமர் நமது முன்னோர். இந்தியர்களின் டி.என்.ஏ.வும் ஒன்றுதான்’ என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இராமஜோதியை எடுத்து வந்திருக்கின்றனர்.
இவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்..!
நஸ்னீன் அன்சாரி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். ஹனுமன் சாலிசா மற்றும் இராமசரிதையை உருது மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார். பாடல்புரி மடத்தின் தலைவர் பாலக் தாஸை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். ஒற்றுமை மற்றும் அமைதிக்காக அயராது உழைத்து வருகிறார். சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் ‛ராம்பந்த்’ என்ற அமைப்புடன் இணைந்து இராமபக்தியை பரப்பி வருகிறார்.
இதுகுறித்து நஸ்னீன் கூறுகையில், “அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் இராமர் நமது மூதாதையர். ஒருவர் தனது மதத்தை மாற்றி இருக்கலாம். ஆனால், மூதாதையரை மாற்ற முடியாது. இஸ்லாமியர்களுக்கு மெக்கா புனிதத் தலம். அதேபோல, ஹிந்துக்களுக்கும், இந்திய கலாச்சாரத்தை நம்புபவர்களுக்கும் அயோத்தி புனிதத் தலமாக உள்ளது” என்றார்.
இராமஜோதியை எடுத்து வந்த மற்றொருவரான நஜ்மா பர்வீன், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 17 ஆண்டுகளாக இராமபக்தியை பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். வாரணாசியை சேர்ந்த ஹிந்து – முஸ்லிம் மையம் மூலம் நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள் மற்றும் ஹிந்துக்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார்.
நஸ்னீன் அன்சாரியும், நஜ்மா பர்வீனும் முத்தலாக் முறைக்கு எதிராகப் போராடியவர்கள். ஏராளமான முஸ்லீம் பெண்களின் ஆதரவைப் பெற்றவர்கள். ராமநவமி மற்றும் தீபாவளி பண்டிகை தினங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லீம் பெண்களுடன் இணைந்து இராம ஆரத்தி நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.