ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றி வரும் திமுக கூட்டணி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை சேலம் மேற்கு, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
கரும்பு, தக்காளி என பாலக்கோடு புகழ்பெற்ற விவசாய பூமி. இத்தனை ஆண்டுகளாக, தமிழகத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் தர்மபுரி மாவட்டத்தின் பங்கு வெறும்1.7% மட்டுமே. ஆனால் மொத்த மாநிலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களின் பங்கு மட்டுமே 34%. இத்தனை ஆண்டுகளாக தர்மபுரி தொழில் வளர்ச்சி இல்லாமல் பின்தங்கி இருக்கிறது. தொழிற்சாலைகள் இல்லை. வேலைவாய்ப்பு இல்லை. ஜாதி அரசியல் செய்து, மாவட்டத்தையே கடைசியாக வைத்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாமல் தர்மபுரி மக்கள் மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், தர்மபுரி மாவட்டத்தில் 31,336 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,21,410 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,32,117 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,01,522 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பும், 87,523 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,84,039 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், முத்ரா கடனுதவி 3,010 கோடி ரூபாய் என நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் 33 சதவீதம் பெண்கள் இருக்கவேண்டும் என்று பெண்களுக்கு இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்தவர் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள். மோடி வீடு வழங்கும் திட்டத்தில் 70 சதவீத வீடுகள் பெண்களின் பெயரில் பதியப்பட்டுள்ளது. இலவச கழிப்பறை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டங்களை பெண்களுக்குக் கொண்டுவந்தார். தனது மந்திரி சபையில் 11 பெண்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கியுள்ளார்.
இந்தியாவில் இன்று 1.2 கோடி மகளிர் சுயஉதவி குழு உள்ளன. அதில் 88 சதவீத சுயஉதவி குழுக்கள் முழுவதுமாக பெண்கள் நடத்தும் சுய உதவி குழுக்கள் ஆகும். கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 7 கோடி பெண்கள் சுய உதவி குழுக்களில் இணைத்துள்ளார். இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகை 7.22 லட்ச கோடி ரூபாய். இதில் வாரா கடன் வெறும் 1.9 சதவீதம் மட்டுமே. கடன் பெற்ற சகோதரிகள் சரியான நேரத்தில் திருப்பி செலுத்துகிறார்கள்.
தர்மபுரி – மொரப்பூர் இரயில்வே பாதை, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 1941-ஆம் ஆண்டு மூடப்பட்டது. 80 ஆண்டுகளாக தர்மபுரி மொரப்பூர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் போராடியும் எந்த அரசும் செவி சாய்க்கவில்லை. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்தான் தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு ரூ358.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றது கூடிய விரைவில் இந்த ரயில்வே பாதை கட்டி முடிக்கப்பட்டு விட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்.
பாலக்கோடு தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான பாலக்கோட்டில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி, பாதாள சாக்கடை திட்டம், பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம், தக்காளிக்கூழ் மற்றும் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், 99% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றி வரும் திமுக கூட்டணி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் தமிழகம் முழுவதும் கிடைக்க, வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.