பாரத பிரதமர் நரேந்திர மோடியை, மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்திருந்த நிலையில், இதற்காக இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்நாட்டின் முன்னாள் துணை சபாநாயகரும், தற்போதைய எம்.பி.யுமான ஈவா அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டதோடு, ஆழ்கடலில் ஸ்நோர்கெலிங் செய்தும் மகிழ்ச்சியடைந்தார்.
இதன் பிறகு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, மாலத்தீவின் மகிமை பற்றியும், தனது பயண அனுபவங்கள் குறித்தும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் நினைவுகூர்ந்திருந்தார்.
பிரதமர் மோடியின் இப்பதிவை விமர்சித்து, மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்சா ஷரீப், அப்துல்லா மஹ்சூம் மஜீத் ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இது இரு நாட்டு உறவுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஆகவே, மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மாலத்தீவு அமைச்சர்களின் பதிவு குறித்து இந்தியா தரப்பில் விளக்கமும் கேட்கப்பட்டது. இது அந்நாட்டு அதிபர் முகமது முய்வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. எனவே, அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்து இல்லை. அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்த மரியம் ஷியூனா, மல்சா ஷரீப், அப்துல்லா மஹ்சூம் மஜீத் ஆகிய 3 அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில்தான், மாலத்தீவின் முன்னாள் துணை சபாநாயகரும், தற்போதைய எம்.பி.யுமான ஈவா அப்துல்லா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கருத்துகள் மீதான சீற்றம் புரிகிறது. இந்தியர்களின் கோபம் நியாயமானதுதான். இக்கருத்துக்கள் மூர்க்கத்தனமானது. இனவெறி மற்றும் சகிக்க முடியாதது.
அமைச்சரின் கருத்துகளில் இருந்து மாலத்தீவு அரசு விலகி இருப்பது மிகவும் முக்கியமானதாகும். அமைச்சர்களை அரசு இடைநீக்கம் செய்திருப்பது எனக்குத் தெரியும். ஆனால், மாலத்தீவு அரசு இந்திய மக்களிடம் முறையான மன்னிப்புக் கேட்பது முக்கியம் என்று நினைக்கிறேன். அமைச்சர்களின் கருத்து வெட்கக்கேடானது.
அமைச்சர்களின் வார்த்தைகள் மாலத்தீவு மக்களின் கருத்தை எந்த விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. நாம் இந்தியாவைச் சார்ந்து இருந்தோம் என்பதையும், நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் இந்தியாதான் முதலில் பதிலளித்தது என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம்.
பொருளாதார உறவுகள், சமூக உறவுகள், சுகாதாரம், கல்வி, வர்த்தகம் போன்றவற்றிற்காக இந்தியாவைச் சார்ந்து இருக்கிறோம். சுற்றுலா மற்றும் மாலத்தீவு மக்கள் இதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாகவும், இதைப் பற்றி மிகவும் அறிந்தவர்களாகவும் உள்ளனர்.
இதற்காக இந்திய மக்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். அமைச்சர்களின் இந்த இழிவான கருத்துக்களை நாங்கள் அனைவரும் கண்டித்தோம். இந்திய மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து மாலத்தீவுக்கு வாருங்கள், மாலத்தீவில் உங்கள் இருப்பை நாங்கள் பாராட்டுகிறோம், மதிக்கிறோம்.
நீங்கள் அனுப்பும் மருத்துவர்களையும், நீங்கள் அனுப்பும் ஆசிரியர்களையும், நீங்கள் அனுப்பும் சுற்றுலாப் பயணிகளையும் நாங்கள் மதிக்கிறோம். எனவே, தயவு செய்து மீண்டும் வரவும். விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்கு திரும்பி வாருங்கள் என்று இந்திய மக்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
#WATCH | On Maldives MP's post on PM Modi's visit to Lakshadweep, Maldives MP and Former Deputy Speaker, Eva Abdullah says "…I do want to apologize and across the political spectrum, political parties and politicians, we've all condemned these derogatory remarks by the… pic.twitter.com/zn15dKKZSO
— ANI (@ANI) January 7, 2024