பண்டையக் காலம் தொட்டு தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டுகிற மாண்புகளில் ஒன்றாக இருக்கும் ஜல்லிக்கட்டு குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் பண்டிகைகளுக்கும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. பெரும்பாலும், பண்டிகைகளுடன் வீர விளையாட்டு போட்டிகள் சேர்ந்து வருகின்றன. தமிழர்களின் பெருமை பேசும் பல பாரம்பரிய விளையாட்டுகளில், ஜல்லிக்கட்டும் ஒன்று.
பண்டையக் காலத்தில் தமிழா்களின் வீரத்தை நிலைநாட்டுகிற மாண்புகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு இருந்துள்ளது. காளையை அடக்கும் வீரர்களுக்கு பெண்களைக் கொடுக்கும் வழக்கமும் இருந்தது. விஜயநகர அரசர்களின் ஆட்சியின்போது ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயா் உருவானது. அதற்கு முன்பு ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இதற்கு எருது விடுதல், மஞ்சுவிரட்டு, காளை விரட்டு, கொல்லேறு தழுவுதல், ஏறுகோள் உள்ளிட்ட பல பெயர்கள் உள்ளன.
சிந்துவெளி நாகரீக அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் வீரன் ஒருவன் காளையை அடக்கும் சித்திரமும், சினமுற்ற காளை, ஒரு வீரனை கொம்பால் குத்தியெறியும் சித்திரமும் இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் கி.மு. 2 ஆயிரம் காலத்திலேயே காளையை அடக்கும் வீர விளையாட்டுகள் நம் வாழ்வோடு கலந்திருந்தததை உணர முடியும்.
மேலும், தமிழர் வாழ்வியலுக்குச் சான்றாக இருக்கும் சங்க இலக்கியங்களிலும், ஆற்றுப்படை நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் ஜல்லிக்கட்டு குறித்த செய்திகள் உள்ளன. பழந்தமிழ் நூலான கலித்தொகையில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சில பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வில் ஜல்லிக்கட்டு தொடர்பான சான்றுகள் பல கிடைத்துள்ளன.