காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. ஆகவே, ஹமாஸ் தீவிரவாதிகள் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு, இஸ்ரேல் இன்று வரை பதிலடி கொடுத்து வருகிறது.
முதலில் வடக்கு காஸாவில் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், படிப்படியாக முன்னேறி தற்போது மத்திய மற்றும் தெற்கு காஸாவிலும் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.
குறிப்பாக, இத்தாக்குதலின்போது, ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், முக்கிய முகாம்கள், பதுங்கு குழிகள், சுரங்கப் பாதைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.
மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காஸா நகரைச் சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 22,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 40,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், வடக்கு காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவ கட்டமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், “காஸாவின் வடக்குப் பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இராணுவ கட்டமைப்பை அழிக்கும் பணியை முடித்து விட்டோம்.
தற்போது மத்திய மற்றும் தெற்கு காஸாவில் ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சில காலம் எடுக்கும். ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதால், அந்த அமைப்பினர் தளபதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.
மத்திய காஸா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருக்கிறார்கள். தெற்கு காஸாவில் கான்யூனுஸ் நகரில் பெரிய நகர்ப்புற நிலப்பரப்பில் சுரங்கப் பாதைகள் உள்ளன. மத்திய மற்றும் தெற்கு காஸாவிலும் ஹமாஸை அழித்து இராணுவம் வேறு வழிகளில் செயல்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.